9.1.11

மனசில் பதிஞ்ச இன்னொரு காலடிச் சுவடு...

கடந்த பத்தாண்டுகளில் இணையம் அளிக்கும் சௌகரியங்களை, சௌஜன்யங்களை அராஜகமான வகையில் பயன்படுத்தி தமிழ் இதழ்களிலும் இணையத்திலும் எழுதப்படும் ஆரவாரமான, வெளிப்பூச்சான பொய்மையான எழுத்துக்கள் பெரும் சலிப்பும் ஒவ்வாமையும் அளிக்கத் துவங்கியுள்ளன. திடீர் பிள்ளையார்கள் போல, திடீர் தத்துவவாதிகளும், திடீர் மாய்மாலக்கார அறிவு ஜீவிகளும் திடீர் சினிமா வல்லுநர்களும் திடீர் நாடகப் பிதாமகர்களும் வலைப்பின்னல்களில் தோன்றித் தோன்றி மறைந்து கொண்டிருக்கிறார்கள்.

சில ஜாம்பவான்கள் மாய்மாலங்களுடனும் தந்திரங்களுடனும் பொய்மையுடனும் கபடத்தனமான எண்ணங்களுடனும் அறிவுலகத்தை ஆக்கிரமிக்க முயற்சித்து ஓரளவு தற்காலிகமான வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். தங்களுக்குத் தாங்களே இணையத்தில் கடிதங்கள் எழுதிக் கொண்டு தங்களைத் தாங்களே வெற்று ஆரவாரத்துடன் சிலாகித்துக் கொண்டு தங்களைத் தாங்களே கேள்விகள் கேட்டுக் கொண்டு தங்களுக்குத் தாங்களே மர்மமான இடங்களில் சொறிந்து கொடுத்துக் கொண்டுக்கிறவர்களின் ஜனத்தொகை தமிழில் அதிகரித்து வருகிறது. உண்மையான, நேரடியான வாசிப்புத் திறன் ஏதுமற்று, வெற்றுப் பெயர்களை மட்டுமே உதிர்த்து அடுத்தவர்களின் உடுப்பைக் களைந்து எறிய முயற்சித்து தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு இணையத் திணைகளில் நிர்வாணமாக அலைகின்ற கூட்டமும் அதிகரித்து வருகின்றதை கண்கூடாகப் பார்த்து வருகின்றோம்.

மேலும் வாசிக்க...

5.12.10

மனசுக்குள் ஒரு மழைச்சாரல் - ஏகேசி நடராஜன்

டெல்லியில் ஸ்பிக் மேகே (SPIC MACAY) அமைப்பு இந்த ஆண்டும் Music in the Park என்கிற அற்புதமான இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார்கள். குளிர்காலத்தின் வார இறுதிகளின் மாலைகளை இசைமயமாக ஆக்கும் அற்புத நிகழ்ச்சி. நவம்பர் 13ம் தேதி டாக்டர் எல்.சுப்பிரமணியத்தின் வயலின் நிகழ்ச்சி, பர்வீன் சுல்தானாவின் இந்துஸ்தானி வாய்ப்பாட்டு, உஸ்தாத் பஹாஉத்தீன் ருத்ர வீணா போன்ற பல அருமையான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார்கள்.

நேற்று (04 டிசம்பர் 2010) மாலை கிரிஜா தேவியின் இந்துஸ்தானி இசை இருக்கிறது வருகிறாயா என்று நண்பர் கேட்டார். டெல்லி தமிழ்ச் சங்கத்தில் ஏ.கே.சி.நடராஜன் கிளாரினெட் நிகழ்ச்சி இருக்கிறது. இந்த முறை கிரிஜா தேவி வேண்டாம் என்று பார்க்கிறேன் என்று சொன்னேன்.

நண்பர் மிகுந்த ஆச்சரியத்துடன் கேட்டார். ஏ.கே.சி. இன்னும் வாசிக்கிறாரா? எக்கச்சக்கமா வயதாகியிருக்குமே?

வயதாகி இருந்தது. மேடையில் வந்து அமரும்போது தளர்வுடன் தான் இருந்தார். ஆனால் கிளாரினெட்டைத் தூக்கியதும் ஏ.கே.சி. வாசிக்கவில்லை. ஏதேதோ மாயங்கைளை நிகழ்த்தினார். வாணவேடிக்கை காண்பித்தார். கேட்டவர்களை உருக வைத்தார். உற்சாகம் கொள்ள வைத்தார்.

இத்தனை இறுக்கமாக முகத்தை வைத்திருக்கும் ஒரு மனிதருக்குள் இத்தனை பிரம்மாண்டமான இசைப் பிரவாகமா என்று உருகி உருகிக் கேட்க வைத்தது அவருடைய வாசிப்பு.

மேலும்...